நாட்டில் நிலவும் மஞ்சளுக்கான தட்டுப்பாட்டை நீக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதென ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில்,

நாட்டின் தேவைக்காக வருடம் ஒன்றிற்கு 7 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் மஞ்சள் தேவைப்படுகிறது. ஆனால் கடந்த வருடம் வரை ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் மாத்திரமே இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டது. மிகுதி 5 ஆயிரத்து 400 மெட்ரிக் தொன் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டது.

எனினும், கடந்த வருட இறுதியில் மஞ்சள் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்தே மஞ்சள் தூளுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்தது.

தட்டுப்பாட்டை நீக்குவதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக, சுங்கப்பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 600 மெட்ரிக் தொன் மஞ்சளை சந்தைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இவ்வருடம் சுமார் 2 ஆயிரத்து 200 ஹெக்டெயாரில் புதிதாக மஞ்சள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தாக்கம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மஞ்சள் தூள் 2500 ரூபா வரையான அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்களினால் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதன் காரணமாக, மஞ்சள் தூள் கிலோகிராம் ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலை 750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

அதிக பட்ச சில்லறை விலையை மீறி விற்பனை செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.