அரியாலையில் இருந்து லண்டன் செல்ல இருந்த நபருக்கு கொரோனா உறுதி. 12 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

422

யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்து லண்டன் போவதற்காக சென்ற ஒருவருக்கு கொரோனா உறுதி செய்தமையினால் அவருடன் பழகிய 12 குடும்பங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் அடங்கும் அரியாலை கிராமத்திற்கு இரு மாதங்களின் முன்னர் லண்டனில் இருந்து வருகை தந்த ஒருவர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியிருந்தார்.

இருப்பினும் மீண்டும் நாடு திரும்பும் முயற்சிக்காக ஒக்டோபர் மாதம் கொழும்பு சென்று வந்துள்ளார். இவ்வாறு கொழும்பு சென்று வந்தவர் லண்டன் போவதற்காக. கடந்த 9ஆம் திகதி யாழில் இருந்து கொழும்பிற்கு பயணித்து 11ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் லண்டன் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு லண்டன் வாசிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதனால் அவருடன் பழகியவர்கள் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குள் 12 குடும்பங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ளவர்களுக்கு எழுமாற்று பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டவர்களில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர், ஓர் பெண் சட்டத்தரணி ஆகியோரும் உள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.