கூகுளின் தாய் நிறுவனமான அல்பபெட்டின் தலைமை நிறைவேற்று அதிகாரியானார் சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான லாரி பேஜ், அல்பபெட்டின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக  இருந்து வந்தார். இந்நிலையில் அப்பதவிக்கு சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக கூகுளின் நிறுவனர்களுக்கு சுந்தர் பிச்சை தன் டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். 

கூகுள் நிறுவனம் தானியங்கி கார், வாழ்வியல் அறிவியல் என பல்வேறு சேவைகளிலும் ஈடுபடத் தொடங்கிய நிலையில்,  அத்தொழில்கள் அனைத்தும் அல்பபெட் என்ற ஒரே குடையின் கீழ் 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அப்போது கூகுள் நிறுவனத்தை மட்டும் நிர்வகித்து வந்த சுந்தர் பிச்சை தற்போது அக்குழுமத்தின் ஒட்டுமொத்த தலைமைப் பொறுப்பையும் ஏற்க உள்ளார். 

இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை சென்னையில் பாடசாலைப்படிப்பை முடித்து பின்னர் சென்னை ஐஐடியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் தலைமைப் பதவியில் தமிழர் ஒருவர் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.