ஈரானிய ஏவுகணை தாக்குதலிலேயே உக்ரேனிய விமானம் வீழ்த்தப்பட்டதாக சான்றுகள் சுட்டிக்காட்டுவதாகவும், இந்த தாக்குதல் “தற்செயலாக நடந்திருக்கலாம்” என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

நேற்று (09) ஒட்டவாவில் செய்தியாளர்களிடம் பேசும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது,

எங்கள் கூட்டாளிகள் மற்றும் எங்கள் சொந்த உளவுத்துறை உட்பட பல ஆதாரங்களில் இருந்து இந்த தகவலை உறுதி செய்தோம். ஈரானிய மேற்பரப்பில் இருந்து வான்வழி ஏவுகணையால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதற்கான சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது தற்செயலாக நடந்திருக்கலாம்.”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ,அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கெய்வ் நகருக்கு புறப்பட்ட உக்ரைன் இன்டர்நஷனல் ஏர்லைன்ஸ் விமானம் தெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் 63 கனடியர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.