6 வது நபர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்ட ஆறாவது நபர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது.

வற்ஃபேர்ட் பொது மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட COVID-19 நோயாளி உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 80 வயதான ஆண் என்றும் அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் மருத்துவனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவருக்கு உள்நாட்டிலேயே வைரஸ் தொற்றியுள்ளது என்றும் அவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களுடன் தொடர்புகொள்ள சுகாதார அதிகாரிகள் முயன்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி கூறுகையில்; கொரோனா வைரஸால் ஆறாவது நபர் உயிரிழந்துள்ளமை குறித்து வருந்துகிறேன். அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 54 ஆல் அதிகரித்துள்ளது.