கொரோனாவால் இத்தாலியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள அந்நாட்டில் உள்ள ஒரு சிறு நகரம் வைரஸில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளது.

இத்தாலியின் வெனிஸ் நகரத்திலிருந்து 70 கிமீ தூரத்தில் உள்ள சிறு நகரம் வோ. கடந்த பெப்ரவரி மாதம் 21-ஆம் திகதி இத்தாலியின் முதல் கொரோனா தொற்று வோ-வில் வசித்த நபருக்கு உறுதி செய்யப்பட்ட போது உலகமே அந்த நகரத்தை உற்று நோக்கியது.

தற்போது இத்தாலியில் உயிரிழப்பு 7500-ஐ தாண்டிய நிலையில் வோ வில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை, மேலும் அங்கு கொரோனாவால் உயிரிழப்புகளும் இல்லை.

இதனை எப்படி சாத்தியப்படுத்தியது வோ நகரம் என்ற கேள்விக்கு அது குறித்த ரகசியத்தை சொல்கிறார்கள் வோ நகரவாசிகள்.

முதலாவது தனிமைப்படுத்துவது. இரண்டாவது எல்லோரையும் பரிசோதனை செய்வது. பெப்ரவரி 21-ஆம் திகதி தங்கள் நகரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்த வோ நகரவாசிகள், 23-ஆம் திகதி நகரத்தை முற்றிலுமாக மூடினர்.

நகருக்குள் யாரும் வரவோ, நகரிலிருந்து யாரும் வெளியேறவோ அனுமதி மறுக்கப்பட்டது. மருந்து மற்றும் மளிகைப் பொருட்கள் மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. 3000 குடும்பங்கள் கொண்ட அந்த நகரில் வசித்தவர்கள் அத்தனை பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பெப்ரவரி 29-ஆம் திகதி பரிசோதனைகளை முடித்தபோது அந்நகரின் மக்கள் தொகையில் 3 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இவர்களில் அறிகுறிகள் இல்லாமலே கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தவர்களும், லேசான அறிகுறிகளுடன் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். தீவிரமாக பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிமுறைகளை பின்பற்றுகின்றனரா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். கொரோனா தொற்று இல்லாதவர்களும் சுய தனிமைப்படுத்தலில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இதையடுத்து மார்ச் 23 ஆம் திகதி நடத்தப்பட்ட பரிசோதனையில் அங்கு புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது.

கொரோனா தங்களை தீண்டியபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடித்ததால் அதிலிருந்து வோ நகரம் முழுமையாக விடுபட்டுள்ளது.