தெற்கு அவுஸ்திரேலியாவில் புளூரியூ தீபகற்பத்தில், அடிலெய்டுக்கு தெற்கே, நச்சு பாசி பரவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாரம் அங்கு கடற்கரைகளில் உலாவியவர்கள் சுவாச பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். மேலும், பல கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரையில் ஒதுங்கியுள்ளன.
வைட்டிங்கா பாயிண்ட் முதல் விக்டர் ஹார்பர் வரையிலான கடற்கரைகளில் மஞ்சள் நிற நுரை தோன்றியுள்ளது. இது கடல் உயிரினங்களின் உயிரிழப்புக்கு காரணமாகவும், நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் நீந்துபவர்களுக்கு சுவாச கோளாறுகளை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடற்கரையில் நுரை படர்ந்திருப்பதையும், மீன்கள் மற்றும் கடல் டிராகன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் இறந்து கிடப்பதையும் புகைப்படங்கள் பதிவு செய்துள்ளன.
தெற்கு அவுஸ்திரேலிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA) இதுகுறித்து எச்சரித்துள்ளது. “சிலர் கண்களில் எரிச்சல், மங்கலான பார்வை, இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றை அனுபவித்துள்ளனர்,” என அது தெரிவித்துள்ளது. EPA, PIRSA மீன்வளத்துறை மற்றும் SA சுகாதார அமைப்புடன் இணைந்து, நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறது.
“இது ஒரு நுண்ணிய பாசி பரவலால் ஏற்பட்டிருக்கலாம். வெப்பமான வெப்பநிலை, அமைதியான நீர் மற்றும் தொடர்ந்து நிலவும் கடல் வெப்ப அலை ஆகியவை இதற்கு காரணமாக இருக்கலாம். தற்போது வெப்பநிலை வழக்கத்தை விட 2.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், காற்று மற்றும் அலை குறைவாகவும் உள்ளது,” என EPA அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெதர்ஸோன் பெற்ற சோறோஃபில்-ஏ செறிவு வரைபடங்கள், வெப்பமான நிலையில் பாசி செழித்து வளர்வதை உறுதிப்படுத்துகின்றன.
இப்பகுதியில் உள்ளவர்கள் கடற்கரையை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் வரும் வரை உள்ளூர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.