Homeஇலங்கைபோக்குவரத்து அபராதங்களை Govpay மூலம் செலுத்த ICTA நடவடிக்கை

போக்குவரத்து அபராதங்களை Govpay மூலம் செலுத்த ICTA நடவடிக்கை

இலங்கையின் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) போக்குவரத்து அபராதங்களை Govpay எனும் புதிய இணைய செலுத்துதல் தளம் மூலம் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளது.

ICTA இன் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்ஹ (Harsha Purasinghe) இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “மிக விரைவில் பொதுமக்கள் தமது போக்குவரத்து அபராதங்களை Govpay மூலம் செலுத்த முடியும். இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிவாரணத்தை வழங்கும்” என கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் தெரிவித்தார்.

இதற்கான அடிப்படைப் பணிகளை ICTA ஏற்கனவே முடித்துவிட்டதாகவும், விரைவில் இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க சேவைகளுக்கான உத்தியோகபூர்வ இணைய செலுத்துதல் தளமாக Govpay அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி, அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் கல்வி கட்டணங்கள் போன்றவற்றை செலுத்த முடியும்.

கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் புரசிங்ஹ மேலும் கூறுகையில், “Govpay தளம் சோதனை முயற்சியாக இருந்தபோதிலும், இது பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. பல நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டு, குறுகிய காலத்தில் பல புதிய வசதிகளுடன் இதனை அமுல்படுத்தினோம். கடந்த 7 ஆம் திகதி Govpay தொடங்கப்பட்டபோது 16 அரச நிறுவனங்கள் இணைக்கப்பட்டிருந்தன. இன்று 25 நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு வாரமும் புதிய அரச நிறுவனங்களை சேர்த்து வருகிறோம்” என தெரிவித்தார்.

இலங்கையில் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துவதற்கு இது முக்கிய படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு வசதியை ஏற்படுத்துவதுடன், அரச சேவைகளை எளிமையாக்க Govpay பெரிதும் உதவும் என ICTA தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular