இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) செய்மதி அகல அலைவரிசை சேவையை இடைநிறுத்த முடிவு செய்ததாக வெளியான ஊடக அறிக்கைகளை நிராகரித்துள்ளது. இச்சேவை இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
TRCSL இன் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் (Bandula Herath) இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், இச்சேவையை வழங்குவதற்கு தேவையான ஒழுங்குமுறைகளை மேற்கொள்ள ஒரு கட்டுப்பாட்டு முகப்பு அமைப்பு (dashboard system) தேவைப்படுவதாக கூறினார். ஆனால், இந்த அமைப்பை நாட்டிற்கு கொண்டுவருவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
‘ஸ்டார்லிங்க்’ செய்மதி அகல அலைவரிசை சேவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், தேவையான அமைப்புகள் தயாரானதும் இது அமுலுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய பணிப்பாளர் நாயகம், “அந்த நிறுவனத்தால் வழங்கப்படும் சேவை நிறுத்தப்படாது என பொறுப்புடன் கூற முடியும். இச்சேவை ஏப்ரல் மாதத்திற்குள் எமது நாட்டில் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது” என உறுதியளித்தார்.
“அவர்கள் வழங்கும் சேவையை சரியாக ஒழுங்குபடுத்துவதற்கும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவை சரியாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பை கட்டுப்படுத்துவதற்கும் ஒரு கட்டுப்பாட்டு முகப்பை அவர்கள் வழங்குகிறார்கள். இதன் மூலம் இவ்விரு விடயங்களையும் திறமையாக ஒழுங்குபடுத்த முடியும்” எனவும் அவர் விளக்கினார்.