நீக்கப்பட்ட காவல் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மறைந்திருக்க உதவியதாக சந்தேகிக்கப்பட்டு இன்று (மார்ச் 29) கைது செய்யப்பட்ட நபர், 10 இலட்சம் ரூபா பிணைத்தொகையில் மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட காவல் துறை உத்தியோகத்தர் ஒருவர், மாத்தறை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி, வெலிகம – பெலென பிரதேசத்தில் உள்ள W15 விடுதிக்கு அருகில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 20 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர், கடந்த மார்ச் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். தற்போது அவர் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கண்டி – தும்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, மாத்தறை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCD) முன்னாள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 8 காவல் துறையினர் மற்றும் முன்னாள் காவல் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரை, வெலிகம துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேகநபர்களாக பெயரிட்டு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.