Homeஅரசியல்மீனவர் பிரச்சினைக்கு தீர்வு: பிரதமர் மோடி வருகைக்கு முன் இலங்கை அமைச்சர் அறிவிப்பு

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு: பிரதமர் மோடி வருகைக்கு முன் இலங்கை அமைச்சர் அறிவிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக, இலங்கையின் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான மீன்பிடி பிரச்சினை தொடர்பாக, மீனவர்கள் முன்னிலையில் அரசாங்க மட்டத்தில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்திலிருந்து வந்த மீனவர் பிரதிநிதிகள் குழு, சனிக்கிழமை (மார்ச் 29) மாலை யாழ்ப்பாணத்தில் அமைச்சரை சந்தித்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். மீனவர் தலைவர் ஆர். சகாயம் தலைமையிலான இக்குழு, இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தையை தொடங்குமாறு அமைச்சரிடம் கோரியதுடன், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. இப்பிரச்சினை தொடர்பான கடைசி அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தை 2016 இல் நடைபெற்றிருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரது இலங்கை பிரதமருடனான சந்திப்பில் மீனவர் பிரச்சினை முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ராமேஸ்வரம் மீனவர் குழு, இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை சந்தித்ததுடன், இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக கூறி பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் நிலையையும் ஆய்வு செய்தது. முன்னதாக, மார்ச் 26 ஆம் திகதி வவுனியாவில் இந்திய மீனவர் தலைவர்கள், இலங்கை மீனவர் பிரதிநிதிகளை சந்தித்து பேசியிருந்தனர். இதன்போது, இந்திய தரப்பு ட்ரோலிங் மீன்பிடிப்பை நிறுத்த நேரம் கோரிய போதிலும், இலங்கை மீனவர்கள் தமது கடல் பரப்பில் ட்ரோலிங் மீன்பிடிப்பை அனுமதிக்க முடியாது எனவும், ஆனால் சுமுகமான தீர்வுக்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், வடமாகாண மீனவ மக்கள் ஒற்றுமை அமைப்பின் தலைவர்கள், ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களிடம் பேசுகையில், “இந்திய ட்ரோலர்கள் இலங்கை கடல் பரப்பிற்கு வருவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், எமது நாட்டு சட்டம் அதற்கு தீர்வு காணும். எமது மக்கள் தமது கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க வேண்டும் என்பதுடன், கடல் வளங்களை எதிர்கால சந்ததிக்கு விட்டுச் செல்ல விரும்புகிறோம்,” என அமைப்பின் பேச்சாளர் அன்னராசா அன்னலிங்கம் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular