Homeஅரசியல்அமெரிக்க வரிகளுக்கு பதிலடி: இலங்கை பேச்சுவார்த்தைக்கு தயார்

அமெரிக்க வரிகளுக்கு பதிலடி: இலங்கை பேச்சுவார்த்தைக்கு தயார்

இலங்கையின் தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான டொக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அமெரிக்காவால் இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய வர்த்தக வரிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, அவற்றை குறைக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அனைத்து இறக்குமதிகளுக்கும் 10 சதவீத அடிப்படை வரியுடன், பல நாடுகளுக்கு உயர் விகித வரிகளை விதிக்கும் பரஸ்பர வரி முடிவின் ஒரு பகுதியாக, இலங்கைக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர், “இந்த நிலைமை குறித்து எங்களுக்கு முன்னரே தெரியும். ஆனால், ஒரு நாட்டின் கொள்கை முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன், அதை அழுத்தம் கொடுத்து மாற்ற முடியாது. இது அவர்களின் பொதுக் கொள்கை. இப்போது, இதன் எதிர்மறை தாக்கங்களை கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும்,” என கூறினார்.

“நாம் ஏற்கனவே உள்ளக பேச்சுவார்த்தைகளை சில சுற்றுகள் நடத்தியுள்ளோம். இந்த வரிகள் ஏப்ரல் 09 முதல் அமுலுக்கு வரவுள்ளன. பேச்சுவார்த்தைகள் மூலம் வரிகளை குறைக்க முடியும் என நம்புகிறோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இணைந்து முன்னேறி வருவதாகவும், பொருளாதார மீட்சியில் உள்ளதாகவும் குறிப்பிட்ட அ அமைச்சர், “இலங்கை சிறப்பு நிலையில் உள்ளது. வர்த்தக பற்றாக்குறை இருந்தாலும், நாம் IMF திட்டத்துடன் முன்னேறுகிறோம். நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது. இன்னும் ஸ்திரப்படுத்தல் நிலையில் உள்ளோம். இதை விளக்குவதற்கு எங்களுக்கு இடம் உள்ளது. இது அமெரிக்காவின் கொள்கையுடன் பொருந்த வேண்டும்,” என விளக்கினார்.

புதிய வரிகளால் ஏற்படக்கூடிய எதிர்மறை தாக்கங்கள் குறித்து அமைச்சர் கவலை தெரிவித்தார். “நெசவு மற்றும் உணவு ஏற்றுமதிகள் பாதிக்கப்படலாம். நாட்டின் ஏற்றுமதி வருமானம் குறையலாம்,” என அவர் கூறினார்.

பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்காவிட்டால், மாற்று வழிகள் உள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். “அமெரிக்கா உலகளாவிய பொதுக் கொள்கையை பின்பற்றினாலும், எங்களுக்கு வேறு வழிகள் உள்ளன. உதாரணமாக, GSP+ வரி முறையின் மூலம் சிறப்பு சலுகைகளை பேசலாம்,” என அவர் குறிப்பிட்டார்.

“நாம் அமெரிக்காவை தூதரக ரீதியில் அணுகி, பேச்சுவார்த்தைகள் நடத்தவும், நீண்டகால உறவை கட்டியெழுப்பவும், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கையை உருவாக்கவும் எதிர்பார்க்கிறோம்,” என அவர் முடித்தார்.

RELATED ARTICLES

Most Popular