Homeவெளிநாடுஇந்தியாஇந்திய பிரதமர் மோடிக்கு கொழும்பில் உத்தியோகபூர்வ வரவேற்பு

இந்திய பிரதமர் மோடிக்கு கொழும்பில் உத்தியோகபூர்வ வரவேற்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (ஏப்ரல் 4) இரவு இலங்கை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உத்தியோகபூர்வ வரவேற்பு விழா நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடியுடன், இந்திய வெளியுறவு அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய வெளியுறவு செயலாளர் மற்றும் இந்திய அரசின் பல மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு இலங்கை வந்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட பிரமுகர்களால் பிரதமர் மோடி அன்புடன் வரவேற்கப்பட்டார்.

எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட பதிவில், விமான நிலையத்தில் தன்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி, கொழும்பு இந்திய சமூகத்தினரின் உற்சாகமான வரவேற்பையும் பாராட்டினார். “மழை தடையாக இருந்தபோதும், கொழும்பு இந்திய சமூகத்தினர் அற்புதமாக வரவேற்றனர். அவர்களின் அன்பும் உற்சாகமும் என்னை நெகிழ வைத்தது. அவர்களுக்கு நன்றி!” என அவர் குறிப்பிட்டார்.

பண்பாட்டு வரவேற்பு நிகழ்வில், இந்திய-இலங்கை பண்பாட்டு உறவுகளை பறைசாற்றும் நிகழ்ச்சிகளை கண்ட மோடி, “மகாபுருஷ் ஸ்ரீமந்த சங்கர்தேவ், ஸ்ரீ ஸ்ரீ மாதவ்தேவ் எண்ணங்கள், இசை புத்தகங்கள், இந்திய கதைகள், கீத கோவிந்தத்தின் பகுதிகள் பாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதை பார்த்தேன். இந்த பண்பாட்டு பிணைப்புகள் என்றும் செழிக்கட்டும்!” என தெரிவித்தார்.

மேலும், சுந்தர் காண்டத்தின் கதைகளை உள்ளடக்கிய பாரம்பரிய பொம்மலாட்ட நிகழ்ச்சியை ரசித்த அவர், நளின் கம்வாரி மற்றும் ஸ்ரீ அநுர பொம்மலாட்ட சமூகத்தின் ஆர்வத்தையும் பாராட்டினார்.

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அழைப்பை ஏற்று, மோடியின் நான்காவது இலங்கை விஜயமாக இது அமைந்துள்ளது.

விஜயத்தின் போது, ஜனாதிபதி திஸாநாயக்க, பிரதமர் டொக்டர் ஹரினி அமரசூரிய உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

எரிசக்தி, டிஜிட்டல் மாற்றம், பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. முதல் முறையாக பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவது இவ்விஜயத்தின் சிறப்பம்சமாகும் என இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி முன்னதாக தெரிவித்தார்.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மேம்படுத்தும் இந்திய-இலங்கை கூட்டு முயற்சியான சம்பூர் சூரிய மின்சக்தி நிலையம் திறப்பு விழாவும் இதில் முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது.

மேலும், அநுராதபுரத்தில் உள்ள புனித ஸ்ரீ மகா போதியை பிரதமர் மோடி வணங்கவுள்ளார்.

இவ்விஜயத்தை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளை இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஏப்ரல் 5 அன்று, காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை ‘அபே காம’ வளாகம் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுலாகும். மாற்று வழிகளுக்கு வாகன ஓட்டிகளை வழிநடத்துவதற்கு பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 6 காலை 7:30 முதல் 10:30 மணி வரை, அநுராதபுரம் நகரம், புகையிரத நிலைய வீதி, ஜய ஸ்ரீ மகா போதி சுற்றுப்பகுதிகளில் தற்காலிக சாலை மூடல்கள் அமுல்படுத்தப்படும்.

இந்திய பிரதமரின் விஜயத்தை சிறப்பாக நடத்துவதற்கு, பொலிஸாரின் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular