Homeவெளிநாடுஅமெரிக்காஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இலங்கை தயார்: 44% வரி குறித்து அரசு அறிவிப்பு

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இலங்கை தயார்: 44% வரி குறித்து அரசு அறிவிப்பு

இலங்கை அரசாங்கம், அமெரிக்க நிர்வாகத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, வர்த்தக சமநிலையை நியாயமான முறையில் நிர்வகிக்க வழிகளை ஆராய தயாராக உள்ளதாகவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு தடையாக உள்ள வரி மற்றும் வரியல்லாத தடைகளை கணிசமாக குறைப்பதற்கு உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அனைத்து இறக்குமதிகளுக்கும் 10 சதவீத அடிப்படை வரியுடன், வர்த்தக பற்றாக்குறை உள்ள பல நாடுகளுக்கு உயர் விகித வரிகளை விதிக்கும் பரஸ்பர வரிகளை அறிவித்தார். இதில், இலங்கைக்கு 44 சதவீதம் என்ற உயர்ந்த வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவுடனான வர்த்தக சூழல் மாறி வருவதை நாம் அங்கீகரிக்கிறோம். அவர்கள் பரஸ்பர வரிகள் மூலம் வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய முயல்கின்றனர். இலங்கை ஆண்டுக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி செய்யும் நிலையில், 44 சதவீத வரி கணிசமானது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதற்கு இலங்கை அரசு தனது வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா நீண்டகால நண்பராகவும், நம்பகமான வர்த்தக பங்காளியாகவும் உள்ளது எனவும் அது தெரிவித்துள்ளது.

2023 மார்ச் முதல் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தில் இலங்கை ஈடுபட்டுள்ளது. இது, முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி பெறுவதற்கான முயற்சியாகும். இத்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், “இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு, குறிப்பாக வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு அமெரிக்கா அளித்த உறுதியான ஆதரவை நாம் பாராட்டுகிறோம்,” என அரசு கூறியுள்ளது.

“நாம் இப்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, 2024 இல் 5 சதவீத வளர்ச்சி பாதையில் உள்ளோம். ஆனால், எங்கள் ஏற்றுமதி வெளிப்பாடு மற்றும் உலகளாவிய தேவை குறைவு ஆகியவற்றால், மீட்சி பாதை பாதிக்கப்படலாம் என அஞ்சுகிறோம்,” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்க நிர்வாகத்துடன் விரைவில் ஈடுபட்டு, வர்த்தக சமநிலையை நியாயமாக நிர்வகிக்க வழிகளை ஆராய அரசு தயாராக உள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு தடையாக உள்ள வரி மற்றும் வரியல்லாத தடைகளை கணிசமாக குறைப்பதற்கு நாம் உறுதியளிக்கிறோம்,” என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“வணிகம் செய்வதை எளிதாக்குவது அரசின் முதன்மை முன்னுரிமையாக உள்ளது. புதுமைகளை ஊக்குவிக்கும், வணிக பங்காண்மைகளை வளர்க்கும், இரு நாடுகளுக்கும் வாய்ப்புகளை திறக்கும் சூழலை உருவாக்க முயல்கிறோம். ஒன்றிணைந்து செயல்பட்டால், புதிய வளர்ச்சி மற்றும் பகிரப்பட்ட நல்வாழ்வு காலத்தை உருவாக்க முடியும்,” என அது முடித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular