அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது வர்த்தகப் போர் உலக பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுள்ள நிலையில், புதிய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். அதேவேளை, சீனாவுக்கு எதிரான வரி விகிதங்களை 125 சதவீதமாக உயர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து, அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்திற்கு பின்னர் பெருமளவு உயர்ந்தன.
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட முழு அறிக்கையில், “சீனா உலக சந்தைகளுக்கு காட்டிய மரியாதையின்மையை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கா சீனாவுக்கு விதிக்கும் வரியை 125 சதவீதமாக உயர்த்துகிறேன். இது உடனடியாக அமுலுக்கு வரும்,” என குறிப்பிட்டார். “எதிர்காலத்தில் சீனா, அமெரிக்காவையும் மற்ற நாடுகளையும் ஏமாற்றும் நாட்கள் நீடிக்காது என்பதை உணரும் என நம்புகிறேன்,” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “75ற்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்க பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு, வர்த்தகம், வர்த்தக தடைகள், வரிகள், நாணய மாற்று முறைகள், மற்றும் பிற வரி சார்ந்த விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளன. இந்த நாடுகள் எனது வலியுறுத்தலுக்கு ஏற்ப அமெரிக்காவுக்கு எதிராக எந்தவித பதிலடியும் கொடுக்கவில்லை. எனவே, 90 நாள் நிறுத்தத்தையும், இந்த காலத்தில் 10 சதவீதமாக குறைக்கப்பட்ட பரஸ்பர வரியையும் அங்கீகரித்துள்ளேன்.
இதுவும் உடனடியாக அமுலுக்கு வரும். இதற்கு உங்கள் கவனத்தை வழங்கியதற்கு நன்றி!” என அவர் கூறியுள்ளார்.
டிரம்பின் இந்த முடிவு, சீனாவுடனான பதிலடிக்கு பதிலடி மோதலை தீவிரப்படுத்தியுள்ளது. சீனா ஏற்கனவே அமெரிக்க பொருட்களுக்கு 84 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், இது உலக வர்த்தகத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.