2025 சனவரி முதல் அமெரிக்காவில் இருந்து மொத்தம் 388 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தது.
இவர்களில் 333 பேர் பெப்ரவரி மாதத்தில் மூன்று தனித்தனி ராணுவ விமானங்கள் மூலம் நேரடியாக அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். மேலும், 55 இந்தியர்கள் பனாமா வழியாக வணிக விமானங்களில் நாடு கடத்தப்பட்டதாக வெளிவிவகார துணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் லோக் சபாவில் எழுத்து மூலம் பதிலளித்தார்.
இது தொடர்பாக, “388 இந்தியர்களில் 333 பேர் சரிபார்க்கப்பட்ட பின்னர், மூன்று தனி சிறப்பு விமானங்கள் மூலம் பெப்ரவரி 5, 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இதுதவிர, பனாமா வழியாக 55 பேர் வணிக விமானங்களில் இந்தியாவை வந்தடைந்தனர்,” என அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகள், மேலும் 295 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இறுதி நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பகிர்ந்துள்ளனர். இவர்களின் விபரங்களை வெளிவிவகார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் சரிபார்த்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நாடு கடத்தப்பட்டவர்களுக்கு எதிரான “மோசமான நடத்தை” குறித்து பேசினாரா எனக் கேட்கப்பட்டதற்கு, “பெப்ரவரி 5 இல் அமிருதசரஸில் தரையிறங்கிய விமானத்தில் நாடு கடத்தப்பட்டவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு விலங்கிடப்பட்டது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் வலுவாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது,” என சிங் பதிலளித்தார்.
மேலும், “அமெரிக்காவால் சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்ட இந்தியர்களை மீண்டும் அழைத்து வர இந்திய விமானங்களை அனுப்ப திட்டம் உள்ளதா?” என்ற கேள்விக்கு, பிரதமர் மோடியின் பெப்ரவரி 12-13 அமெரிக்க விஜயத்தின்போது சட்டவிரோத குடியேற்ற வலையமைப்புகளை ஒடுக்குவது மற்றும் பாதுகாப்பான, சட்டபூர்வ குடியேற்றத்தை ஊக்குவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“இந்தியாவின் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நிலைப்பாடு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மனித கடத்தலுக்கு எதிராக இரு தரப்பும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியம் ஒப்புக்கொள்ளப்பட்டது,” என அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் குடியேற்றச் சட்டங்களை மீறியவர்கள் மட்டுமே நாடு கடத்தப்படுவதாகவும், இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும், திரும்பியவர்கள் தங்கள் கடுமையான அனுபவங்களை பகிர்ந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பெப்ரவரி 5 அன்று அமெரிக்க விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தில் 104 இந்தியர்கள் அமிருதசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இது ட்ரம்ப் நிர்வாகத்தின் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கையின் முதல் பகுதியாகும். இவர்களுக்கு அளிக்கப்பட்ட நடத்தை இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
2009 முதல் 2024 வரை, அமெரிக்காவால் 15,564 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்தது.