Homeவெளிநாடுஇஸ்ரேல்துருக்கி-பாலஸ்தீன மருத்துவமனை அழிப்பு: ஐ.நா. கண்டனம்!

துருக்கி-பாலஸ்தீன மருத்துவமனை அழிப்பு: ஐ.நா. கண்டனம்!

துருக்கியால் நிர்மாணிக்கப்பட்டு, உள்ளூர் அதிகாரிகளால் புற்றுநோய் சிகிச்சை மையமாக இயக்கப்பட்ட துருக்கிய-பாலஸ்தீன நட்புறவு மருத்துவமனையை இஸ்ரேல் அழித்தமைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக், “மருத்துவ உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலையும் ஐக்கிய நாடுகள் திட்டவட்டமாக எதிர்க்கிறது. எந்தத் தரப்பினராலும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகும்,” என தெரிவித்தார். காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் சாத்தியமான போர்க்குற்றங்களாகவும், துன்பத்தில் உள்ள மக்களுக்கு தாங்க முடியாத சூழலாகவும் உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

2023 அக்டோபர் 7 முதல் காசாவில் இனப்படுகொலை தொடங்கியதில் இருந்து, இஸ்ரேலிய படைகள் வடக்கு காசாவின் சுகாதார அமைப்பை திட்டமிட்டு குறிவைத்து வருவதாக ஹக் குறிப்பிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது ஜனவரி முதல் நடைமுறையில் இருந்த போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை முறித்துள்ளது.

2023 அக்டோபர் முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 50,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் சிறுவர்களும் ஆவர். மேலும், 112,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, கடந்த நவம்பரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு காசாவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது பிடியாணைகளை பிறப்பித்தது.

RELATED ARTICLES

Most Popular