2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் முதல் ஆட்டமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்.) மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) இடையிலான போட்டியை சீரற்ற வானிலை சவாலாக எதிர்கொள்ளலாம். மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மார்ச் 22, சனிக்கிழமை நடைபெறவுள்ள இப்போட்டியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளுக்கு “ஆரஞ்சு எச்சரிக்கை” விடுத்துள்ளது. “கங்கை மேற்கு வங்காளத்தில் மார்ச் 22 அன்று இடியுடன் கூடிய மிதமான மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று” பெய்யக்கூடும் என அதன் தினசரி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொல்கத்தாவிற்கான வானிலை முன்னறிவிப்பு, அன்று நகரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்ஸியஸ் மற்றும் அதிகபட்சம் 29 டிகிரி செல்ஸியஸாக இருக்கும் எனவும் தெரிவிக்கிறது.
போட்டிக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை, கே.கே.ஆர். மற்றும் ஆர்.சி.பி. அணிகள் பயிற்சியை மாலை 5 மணியளவில் தொடங்கினாலும், 6 மணியளவில் தொடர்ந்த மழை காரணமாக பயிற்சி நிறுத்தப்பட்டது. மைதான ஊழியர்கள் பணியில் ஈடுபட, வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். போட்டி மாலை 7:30 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், டாஸ் 7 மணிக்கு நடைபெறவுள்ளது. போட்டிக்கு முன், ஐ.பி.எல். தொடக்க விழாவில் ஸ்ரேயா கோஷால், கரண் ஔஜ்லா, திஷா படானி உள்ளிட்டோரின் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
நடப்பு சாம்பியனான கே.கே.ஆர். அணியை அஜிங்கிய ரஹானே தலைமையேற்க, ஆர்.சி.பி. அணியை ரஜத் படிதார் வழிநடத்தவுள்ளார்.
கே.கே.ஆர். அணி: அஜிங்கிய ரஹானே (தலைவர்), ரிங்கு சிங், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ராமந்தீப் சிங், ஆண்ட்ரே ரஸல், அன்ரிச் நோர்ட்ஜே, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா, மயங்க் மார்க்கண்டே, ரோவ்மன் பவல், மனீஷ் பாண்டே, ஸ்பென்சர் ஜோன்சன், லவ்னித் சிசோடியா, அனுகுல் ரோய், மொயின் அலி, சேத்தன் சக்கரியா.
ஆர்.சி.பி. அணி: ரஜத் படிதார் (தலைவர்), விராட் கோலி, யஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன், ரசிக் தார், சுயாஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தகே, ஜேக்கப் பெத்தல், தேவ்தத் படிக்கல், ஸ்வஸ்திக் சிக்கரா, லுங்கி எங்கிடி, அபினந்தன் சிங், மோஹித் ராத்தி.