பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா தீவு நாட்டிற்கு அருகில், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டோங்காவின் பிரதான தீவான டோங்கடாப்புவிலிருந்து வடகிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்ட அறிக்கையில், “நிலநடுக்க மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் (186 மைல்) சுற்றளவிற்குள் உள்ள டோங்காவின் கரையோரங்களில் ஆபத்தான சுனாமி அலைகள் தாக்கக்கூடும்,” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஜேர்மன் புவி ஆய்வு மையத்தின் (GeoForschungsZentrum) தகவலின்படி, இந்நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
டோங்கா, 171 தீவுகளைக் கொண்ட பொலினீசிய நாடாகும். இதன் மக்கள் தொகை சுமார் ஒரு இலட்சத்திற்கு மேல் உள்ளது. பெரும்பாலானோர் பிரதான தீவான டோங்கடாப்புவில் வசிக்கின்றனர். அவுஸ்திரேலியாவின் கரையிலிருந்து 3,500 கிலோமீட்டருக்கு (2,000 மைல்) கிழக்கே அமைந்துள்ள இந்நாடு, வெள்ளை மணல் கடற்கரைகள், பவளப்பாறைகள் மற்றும் அடர்ந்த வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு பெயர் பெற்றது.
டோங்கடாப்பு தீவு, நீர்நிலைகள் மற்றும் சுண்ணாம்புக் குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இதில் அந்நாட்டின் தலைநகரான நுகு’அலோபா அமைந்துள்ளது. மேலும், கடற்கரை விடுதிகள், தோட்டங்கள் மற்றும் 1200களில் கட்டப்பட்ட வரலாற்று பவளகல் நுழைவாயிலான ஹ’அமோங்க அ மாவு ஆகியவை இத்தீவில் உள்ளன.