பப்புவா நியூ கினியாவில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம், பசிபிக் பெருங்கடலில் அமைந்த இந்நாட்டில் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில், நியூ பிரிட்டன் தீவில் உள்ள கிம்பே நகரத்திலிருந்து 194 கிலோமீட்டர் (120 மைல்) கிழக்கே கடலுக்கு அருகில் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்த எச்சரிக்கையில், பப்புவா நியூ கினியாவின் சில கரையோரப் பகுதிகளில் 1 முதல் 3 மீட்டர் உயர அலைகள் தாக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் இந்த எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது. அருகிலுள்ள சாலமன் தீவுகளுக்கு விடுக்கப்பட்ட 0.3 மீட்டர் உயர அலைகள் குறித்த எச்சரிக்கையும் நீக்கப்பட்டது.
இதுவரை சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. நியூ பிரிட்டன் தீவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
பப்புவா நியூ கினியாவின் அருகிலுள்ள நாடான ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம், அந்நாட்டிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தெரிவித்துள்ளது. நியூசிலாந்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
பப்புவா நியூ கினியா, பசிபிக் பெருங்கடலில் உள்ள “ரிங் ஆஃப் ஃபயர்” எனப்படும் நில அதிர்வு பகுதியில் அமைந்துள்ளது. இது உலகின் பெரும்பாலான நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை நடவடிக்கைகள் நிகழும் பகுதியாகும்.