அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய பரந்தளவு வரிகள் உலகளாவிய பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், 50ற்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடங்க வெள்ளை மாளிகையை தொடர்பு கொண்டுள்ளதாக டிரம்பின் முதன்மை பொருளாதார ஆலோசகர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ABC நியூஸின் ‘திஸ் வீக்’ நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க தேசிய பொருளாதார கவுன்ஸில் இயக்குநர் கெவின் ஹாசெட், இந்த வரிகள் நிதி சந்தைகளை சரிய வைப்பதற்கோ அல்லது அமெரிக்க மத்திய வங்கியை (Federal Reserve) வட்டி விகிதங்களை குறைக்க நிர்ப்பந்திப்பதற்கோ உள்ள உத்தி அல்ல என மறுத்தார். மத்திய வங்கியை “அரசியல் நிர்ப்பந்தம்” செய்யும் எண்ணம் இல்லை எனவும் அவர் கூறினார். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட வீடியோவில், வரிகள் மூலம் பங்குச் சந்தையை தாக்கி வட்டி விகிதங்களை குறைக்க வைப்பது திட்டமாக இருக்கலாம் என தெரிவித்திருந்தார்.
NBC நியூஸின் ‘மீட் தி பிரஸ்’ நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெஸ்ஸென்ட், பங்குச் சந்தை வீழ்ச்சியை குறைத்து மதிப்பிட்டு, வரிகளால் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என எதிர்பார்க்க “எந்த காரணமும் இல்லை” என கூறினார்.
கடந்த புதன்கிழமை டிரம்ப் அறிவித்த பரந்தளவு இறக்குமதி வரிகள் உலக பொருளாதாரங்களை அதிர வைத்தன. இதற்கு பதிலடியாக சீனா பதில் வரிகளை விதித்ததுடன், உலகளாவிய வர்த்தகப் போர் மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், டிரம்பின் முக்கிய அதிகாரிகள் இந்த வரிகளை உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்காவை புத்திசாலித்தனமாக மறுநிலைப்படுத்துவதாகவும், பொருளாதார சீர்குலைவுகளை குறுகிய கால விளைவாகவும் சித்தரிக்க முயன்றனர்.
டிரம்பின் புதிய வரி அறிவிப்பிற்கு பின்னர், அமெரிக்க பங்குச் சந்தைகள் கடந்த இரு நாட்களில் சுமார் 10 சதவீதம் சரிந்துள்ளன. இது, ஆய்வாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட ஆக்ரோஷமான வரி முறை எனவும், பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அமெரிக்க மத்திய வங்கித் தலைவர் ஆகியோர் இது பணவீக்கத்தை தூண்டி, பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் எனவும் கருதுகின்றனர்.
வரிகளால் அதிர்ச்சியடைந்த சந்தைகள், மற்றொரு வாரமும் பதற்றத்தில் உள்ளன. டிரம்பின் இறக்குமதி வரிகளின் விளைவுகள், ஐந்து ஆண்டுகளுக்கு முன் கோவிட்-19 நெருக்கடி தொடங்கியதிலிருந்து அமெரிக்க பங்குகளுக்கு மோசமான வாரமாக அமைந்துள்ளது.
ABC நிகழ்ச்சியில் ஹாசெட், “டிரம்பின் வரிகள் இதுவரை 50ற்கும் மேற்பட்ட நாடுகளை வெள்ளை மாளிகையுடன் வர்த்தக பேச்சுகளை தொடங்க வைத்துள்ளன,” என தெரிவித்தார்.
தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-டெ, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளுக்கு பூஜ்ஜிய வரி அடிப்படையை முன்மொழிந்தார். பதில் நடவடிக்கைகளை விதிப்பதற்கு பதிலாக வர்த்தக தடைகளை நீக்குவதாகவும், தாய்வான் நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடுகளை அதிகரிக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.
பிற பொருளாதார வல்லுநர்களை போலல்லாமல், ஹாசெட், “ஏற்றுமதியாளர்கள் விலைகளை குறைப்பதால் பயனீட்டாளர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது,” என கூறினார்.
NBC நிகழ்ச்சியில் பெஸ்ஸென்ட், “வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு எண்ணிக்கை எதிர்பார்ப்பை விட அதிகமாக இருந்தது. நாம் முன்னேறி வருகிறோம். எனவே, மந்தநிலையை எதிர்பார்க்க வேண்டிய காரணம் இல்லை,” என தெரிவித்தார்.