Homeஐரோப்பாஇங்கிலாந்துஹீத்ரோ விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை: மின்சார பிரச்சினை தீர்வு!

ஹீத்ரோ விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை: மின்சார பிரச்சினை தீர்வு!

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் அருகிலுள்ள மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீப்பற்றுதலால் ஏற்பட்ட “முன்னெப்போதும் இல்லாத” மின்சார இடையூறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சனிக்கிழமை முழு சேவையும் எதிர்பார்க்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை முழுவதும் விமானங்கள் தரையிறக்கப்படாததால் சுமார் 200,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். வியாழக்கிழமை இரவு மேற்கு லண்டனின் ஹேய்ஸ் பகுதியில் உள்ள நோர்த் ஹைட் மின்உற்பத்தி நிலையத்தில் தீப்பற்றுதல் ஏற்பட்டதை அடுத்து, ஐரோப்பாவின் பிற விமான நிலையங்களுக்கு உள்வரும் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி தோமஸ் வோல்ட்பை, சிக்கிய பயணிகளிடம் மன்னிப்பு கோரியதுடன், “இது எங்கள் விமான நிலையத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு” எனவும், “100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது” எனவும் கூறினார். மெட் காவல் துறை, இத்தீ விபத்து சந்தேகத்திற்குரியது அல்ல என உறுதிப்படுத்தியுள்ளது. “மின்சார விநியோக உபகரணங்கள்” மீது விசாரணை கவனம் செலுத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

பிரித்தானிய ஏயார்வேஸ், வெள்ளிக்கிழமை மாலை தனது எட்டு நீண்ட தூர விமானங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், பயணிகளை உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பதாகவும் அறிவித்தது. இரவு நேர விமானங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டு, நெரிசலை குறைக்க உதவும் என போக்குவரத்துத் திணைக்களம் கூறியுள்ளது. பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு சமீபத்திய தகவல்களை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு மாற்று மின்மாற்றி பழுதடைந்ததால், பாதுகாப்பு நடைமுறைகளின்படி அமைப்புகள் மூடப்பட்டு, மீதமுள்ள இரண்டு மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் மறுசீரமைக்கப்பட்டு விமான நிலையத்திற்கு மின்சாரம் மீட்கப்பட்டதாக தோமஸ் வோல்ட்பை தெரிவித்தார். பிரித்தானிய ஏயார்வேஸ், ஏயார் கனடா மற்றும் யுனைடெட் ஏயர்லைன்ஸ் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் திட்டமிட்ட விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன.

“முதல் விமானங்கள், ஐரோப்பாவின் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட பயணிகளை மீட்பதற்கும், விமானங்களை மறுஇடமாற்றம் செய்வதற்கும் கவனம் செலுத்துகின்றன,” என விமான நிலைய பேச்சாளர் கூறினார். “இது சாதாரண தீ அல்ல. ஒரு நடுத்தர நகரத்திற்கு சமமான மின்சாரத்தை இழந்தோம். எங்கள் மாற்று அமைப்புகள் செயல்பட்டாலும், முழு விமான நிலையத்தையும் இயக்கும் அளவுக்கு அவை இல்லை,” என வோல்ட்பை தெரிவித்தார்.

சனிக்கிழமை “100 சதவீத செயல்பாடு” திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும், ஹீத்ரோ இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான மையமாக, தினமும் சுமார் 1,300 புறப்பாடுகளையும் தரையிறக்கங்களையும் கையாள்வதாகவும் அவர் கூறினார். கடந்த ஆண்டு 83.9 மில்லியன் பயணிகள் இதன் முனையங்கள் வழியாக பயணித்ததாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

Most Popular