மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயுக்கு அருகில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) நண்பகலில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை சனிக்கிழமை (மார்ச் 29) 1,000ஐ தாண்டியுள்ளது.
நாட்டின் இராணுவ ஆட்சியின் அறிக்கையின்படி, இதுவரை 1,002 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,376 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 30 பேர் காணாமல் போயுள்ளனர். “விரிவான புள்ளிவிபரங்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருகின்றன,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நீண்டகால உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாரில், இந்த இயற்கை பேரிடர் மீட்பு பணிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. சாலைகள் சேதமடைந்து, பாலங்கள் இடிந்து, ஒரு அணை உடைந்ததால், நாட்டின் பல பகுதிகளுக்கு செல்வது ஆபத்தாகவும் சவாலாகவும் உள்ளது. தலைநகர் நேபிடாவில், சனிக்கிழமை சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் பெரும்பாலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
அரச பணியாளர்களுக்கான பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ள நிலையில், அப்பகுதி அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது. மண்டலேயில் பல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளதுடன், மருத்துவமனைகளில் காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து, வளங்கள் தட்டுப்பாடாக உள்ளன.
தாய்லாந்திலும் பாதிப்பு
பக்கத்து நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிலும் இந்நிலநடுக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரில், சாட்டுசாக் சந்தைக்கு அருகில் கட்டுமானத்தில் இருந்த 33 மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர், 26 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 47 பேர் காணாமல் போயுள்ளனர்.
சீன நிறுவனமொன்றால் தாய் அரசுக்காக கட்டப்பட்டு வந்த இந்த கட்டடம் நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து, புகைமூட்டத்துடன் இடிந்து வீழ்ந்ததால், அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பதிவாகியுள்ளது. சனிக்கிழமை, மீட்பு பணிகளுக்கு கனரக இயந்திரங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், காணாமல் போனோர் உயிருடன் இருப்பார்களா என்ற நம்பிக்கை குடும்பத்தினரிடையே மங்கி வருகிறது.
“எனது துணையும் ஐந்து நண்பர்களும் உயிருடன் இருப்பார்கள் என நம்பியிருந்தேன். ஆனால் இந்த இடிபாடுகளை பார்க்கும்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள், உயிருடன் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை,” என 45 வயதான நருயேமோல் தொங்ரெக் கண்ணீருடன் தெரிவித்தார்.
புவியியல் காரணங்கள்
மியன்மார், சாகைங் பிளவுப் பகுதியில் அமைந்துள்ளதால் நிலநடுக்கங்கள் அங்கு பொதுவானவை. இது இந்திய மற்றும் சுண்டா தட்டுகளை பிரிக்கும் பெரிய பிளவுப் பகுதியாகும். பிரித்தானிய புவியியல் ஆய்வு மையத்தின் நில அதிர்வு நிபுணர் பிரையன் பாப்டி கூறுகையில், “சுமார் 200 கிலோமீட்டர் நீளமுள்ள பிளவு ஒரு நிமிடத்திற்கு மேல் நகர்ந்து, சில இடங்களில் 5 மீட்டர் வரை இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளது. இது மரம் மற்றும் செங்கல் கட்டடங்களில் வாழும் மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது,” என தெரிவித்தார்.
சர்வதேச உதவி
மியன்மாரின் இராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங், வெளிநாட்டு உதவிகளை ஏற்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். சீனா, ரஷ்யா, இந்தியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் மீட்பு குழுக்களையும் உதவிகளையும் அனுப்பியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை 5 மில்லியன் டொலர் நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது.
ஆனால், நாட்டின் உள்நாட்டு போர் காரணமாக, பல பகுதிகளுக்கு உதவி சென்றடைவது சவாலாக உள்ளது. “இத்தகைய அழிவை நாம் பார்த்ததில்லை. மனிதாபிமான தேவைகள் பாரிய அளவில் இருக்கும்,” என யங்கோனிலிருந்து பிளான் இன்டர்நெஷனல் அமைப்பின் மியன்மார் பணிப்பாளர் ஹைதர் யாக்கூப் தெரிவித்தார்.