அமெரிக்க கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ்’ (முன்னர் டுவிட்டர்) சமூக ஊடக நிறுவனம், இந்திய அரசாங்கத்திற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இது சட்டவிரோத உள்ளடக்க ஒழுங்குமுறை மற்றும் தன்னிச்சையான தணிக்கை என அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) சட்டத்தின் விளக்கம், குறிப்பாக பிரிவு 79(3)(பி) பயன்பாடு, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறுவதாகவும், இணையத்தில் சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டை பாதிப்பதாகவும் ‘எக்ஸ்’ தெரிவித்துள்ளது. இப்பிரிவைப் பயன்படுத்தி அரசு, பிரிவு 69ஏ-இல் குறிப்பிடப்பட்ட சட்டப்பூர்வ செயல்முறையை மீறி ஒரு இணை உள்ளடக்கத் தடுப்பு அமைப்பை உருவாக்குவதாக வழக்கு குற்றம் சாட்டுகிறது.
2015ஆம் ஆண்டு ஸ்ரேயா சிங்கால் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இது மீறுவதாக ‘எக்ஸ்’ கூறுகிறது. அத்தீர்ப்பு, உள்ளடக்கத்தை தடுக்க வேண்டுமெனில் சரியான நீதித்துறை செயல்முறை அல்லது பிரிவு 69ஏ-இன் சட்டப்பூர்வ பாதை மூலமே முடியும் என உறுதிப்படுத்தியிருந்தது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, பிரிவு 79(3)(பி) ஆனது இணைய தளங்களை, நீதிமன்ற உத்தரவு அல்லது அரசாங்க அறிவிப்பின் பேரில் சட்டவிரோத உள்ளடக்கத்தை நீக்க கட்டாயப்படுத்துகிறது. 36 மணி நேரத்திற்குள் இதை செய்யாவிட்டால், பிரிவு 79(1)-இன் கீழ் உள்ள பாதுகாப்பு துறை பாதுகாப்பை இழக்க நேரிடும். இதனால் இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களின் கீழ் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
ஆனால், இப்பிரிவு அரசாங்கத்திற்கு உள்ளடக்கத்தை தடுக்க தனி அதிகாரம் வழங்கவில்லை என ‘எக்ஸ்’ வாதிடுகிறது. மாறாக, அரசு இச்சட்டத்தை தவறாக பயன்படுத்தி, உரிய செயல்முறையை பின்பற்றாமல் தன்னிச்சையான தணிக்கையை திணிப்பதாக குற்றம் சாட்டுகிறது.
பிரிவு 69ஏ-இன் கீழ், தேசிய பாதுகாப்பு, இறையாண்மை அல்லது பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் எனக் கருதப்படும் இணைய உள்ளடக்கத்தை அரசு தடுக்கலாம். ஆனால், 2009 தகவல் தொழில்நுட்ப (பொது அணுகலுக்கான தகவல் தடுப்பு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு) விதிகளால் இது ஒழுங்குபடுத்தப்படுகிறது. இதற்கு ஒரு கட்டமைக்கப்பட்ட மீளாய்வு செயல்முறை தேவை. இதை பின்பற்றாமல், பிரிவு 79(3)(பி)-ஐ ஒரு குறுக்கு வழியாக பயன்படுத்தி உள்ளடக்கத்தை நீக்குவதாக ‘எக்ஸ்’ குற்றம் சுமத்துகிறது. இது தன்னிச்சையான தணிக்கையை தடுக்கும் சட்ட பாதுகாப்புகளை மீறுவதாக அந்நிறுவனம் கருதுகிறது.
மேலும், இவ்வழக்கில் அரசின் ‘சஹ்யோக்’ இணையதளத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) உருவாக்கிய இத்தளம், பிரிவு 79(3)(பி)-இன் கீழ் உள்ளடக்க நீக்க கோரிக்கைகளை எளிதாக்குவதற்கும், சமூக ஊடக தளங்களுக்கும் சட்ட அமலாக்க முகவர் நிலையங்களுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டது. ஆனால், ‘எக்ஸ்’ இதில் பணியாளர் ஒருவரை நியமிக்க மறுத்துள்ளது. இது ஒரு “தணிக்கை கருவி”யாக செயல்படுவதாகவும், உரிய சட்ட ஆய்வு இன்றி உள்ளடக்கத்தை நீக்க அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது. இது இணைய பேச்சை நீதித்துறை கண்காணிப்பு இன்றி கட்டுப்படுத்துவதற்கு அரசின் மற்றொரு முயற்சி என வழக்கு வாதிடுகிறது.