ஒரு காலத்தில் நாயகி என்றால் வெள்ளை நிறமும், பளபளப்பான முக அழகும், பொருத்தமான உடலமைப்பும் இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை உடைத்து, பெரிய பந்தாவின்றி எளிமையாகவும், ஆழமான கதைக்களம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியவர் நடிகை சாய் பல்லவி.
அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, சமீபத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தை கூறலாம். தனது நடிப்பால் ரசிகர்களை தூங்கவிடாமல் கட்டிப்போட்ட சாய் பல்லவி, இரவு 9 மணிக்கு மேல் விழித்திருக்க முடியாதவர் என்பது ஆச்சரியமான தகவல். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்தார்.
“நான் இரவு 9 மணிக்கு தூங்கி, காலை 4 மணிக்கு எழுவேன். காலை 4 மணிக்கு எழுவதற்கு என்ன காரணம் என்று எனக்கே தெரியாது. ஆனால், படிப்பு மற்றும் வேலைக்காக ஓட ஆரம்பித்த போது இந்த பழக்கம் தொடங்கியது. ஜார்ஜியாவில் மருத்துவம் படிக்கும் போது, காலை 3.30 மணிக்கு எழுந்து படிக்கும் வழக்கம் இருந்தது. அதனால், இந்த நேர முறை என் உடலுக்கு பழகிவிட்டது. பல படப்பிடிப்புகளில் இரவு 9 மணிக்கு மேல் நீடித்தால், அடம்பிடித்தாவது தூங்கச் சென்றுவிடுவேன்,” என அவர் தெரிவித்தார்.
எளிமையான வாழ்க்கை முறையும், சிறப்பான நடிப்பும் சாய் பல்லவியை ரசிகர்களின் உள்ளங்களில் நிறுத்தியுள்ளன. ‘அமரன்’ படத்தில் அவரது திறமை மீண்டும் ஒரு முறை பறைசாற்றப்பட்டுள்ளது.