குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் தேங்காய் திரட்டுப்பால், பாரம்பரிய சுவையுடன் எப்படி தயாரிப்பது என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் துருவல் – 1½ கப்
- பவுடர் வெல்லம் – ¾ கப்
- அரிசி மாவு – 1 ஸ்பூன்
- ஏலக்காய் தூள் – ½ ஸ்பூன்
- முந்திரி – 10
- உலர் திராட்சை – 10
- நெய் – தேவையான அளவு
- உப்பு – 1 சிட்டிகை
- பாசிப்பருப்பு – 3 ஸ்பூன்
செய்முறை
முதலில், ஒரு கடாயில் பாசிப்பருப்பை போட்டு வறுத்து, நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர், மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து அரைத்து, சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும்.
அடுத்து, ஒரு வாணலியில் நெய் ஊற்றி, நறுக்கிய முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்து எடுக்கவும். பின்னர், கடாயில் நெய் ஊற்றி சூடானதும், அரைத்த தேங்காய்-பாசிப்பருப்பு கலவையை சேர்க்கவும். அதனுடன் பவுடர் வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு, அரிசி மாவை சேர்த்து தொடர்ந்து கிளறவும்.
நெய் முழுமையாக உறிஞ்சப்பட்டதும், ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிண்டவும். இறுதியாக, வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து கலக்கவும்.
நெய் பிரிந்து, தேங்காய் திரட்டுப்பால் மிதப்பது போல் தெரியும் போது, அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறினால், அற்புதமான பாரம்பரிய சுவை கிடைக்கும். இதை வீட்டிலேயே எளிதாக செய்து அனைவருடனும் பகிர்ந்து சாப்பிடலாம்!