டெக்ஸாஸ், நியூ மெக்ஸிகோ மற்றும் ஒக்லஹோமா மாநிலங்களில் தொடரும் தட்டம்மை பரவலில் 355 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இது குறைத்து மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை எனவும், இவ்வைரஸ் மேலும் பல மாதங்களுக்கு பரவக்கூடும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
டெக்ஸாஸில் 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூ மெக்ஸிகோவில் 42 பேருக்கும், ஒக்லஹோமாவில் 4 பேருக்கும் நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 110 பேர் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 140 பேர் 5 முதல் 17 வயது வரையிலான இளைஞர்கள். டெக்ஸாஸில், நோய் முதலில் கண்டறியப்பட்ட கெய்ன்ஸ் பிரதேசத்தில் 211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூ மெக்ஸிகோவில், கெய்ன்ஸ் எல்லையை ஒட்டிய லீ பிரதேசத்தில் பெரும்பாலான பாதிப்புகள் உள்ளன.
ஒக்லஹோமா மாநில சுகாதார திணைக்களம், மார்ச் 18 வரை 4 சாத்தியமான தட்டம்மை நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளது. இவர்கள் டெக்ஸாஸ் மற்றும் நியூ மெக்ஸிகோ பரவலுடன் தொடர்புடையவர்கள் எனவும், அனைவரும் தடுப்பூசி பெறாதவர்கள் அல்லது தடுப்பூசி நிலை தெளிவற்றவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான பாதிப்புகள் தட்டம்மை, கழலை, ரூபெல்லா (MMR) தடுப்பூசி பெறாதவர்கள் அல்லது தடுப்பூசி நிலை தெரியாதவர்களிடையே உள்ளன. இருப்பினும், 6 பேர் ஒரு முறையாவது தடுப்பூசி பெற்றவர்கள் எனக் கூறியுள்ளனர். இதில் டெக்ஸாஸில் 2 பேரும், நியூ மெக்ஸிகோவில் 4 பேரும் உள்ளனர். பரவலின் மையப்பகுதியை ஒட்டிய லப்பாக் நகரில் பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மாதிரிகளை ஆஸ்டினுக்கு அனுப்பாமல், 72 மணி நேரத்தில் இருந்து ஒரே நாளில் முடிவுகளை பெற முடிகிறது.
லப்பாக் பொது சுகாதார இயக்குநர் கேதரின் வெல்ஸ், “வெள்ளிக்கிழமை பாதிப்பு எண்ணிக்கை உயர்வு, பரிசோதனை திறன் அதிகரிப்பு மட்டுமல்ல, பரவல் அதிகரிப்பாலும் ஏற்பட்டது. இது பெரிய பரவலாக இருக்கும். இன்னும் பாதிப்பு எண்ணிக்கை உயரும் பக்கத்தில் உள்ளோம். ஒரு வருடம் வரை இது நீடிக்கும் என நினைக்கிறேன்,” என பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நிபுணர்கள் இப்பரவல் தடுப்பூசி பெறாதவர்களால் தூண்டப்படுவதாக கூறுகின்றனர். கெய்ன்ஸ் பிரதேசத்தில் 2023-24 பாடசாலை ஆண்டில் 5 இல் 1 மழலையர் தடுப்பூசி பெறவில்லை. பாதிக்கப்பட்ட பிற பிரதேசங்களும், நோய் பரவலை தடுக்க அமெரிக்க சுகாதார திணைக்களம் நிர்ணயித்த 95% இலக்கை விட குறைவாகவே உள்ளன. MMR தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் 97% பாதுகாப்பை வழங்குகின்றன.
எமோரி பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் கார்லோஸ் டெல் ரியோ, “இப்பரவலை முடிவுக்கு கொண்டுவர தடுப்பூசி தான் தீர்வு. சமூகத்துடன் இணைந்து பணியாற்றி, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு நிறைய முயற்சிகள் தேவை. சமூகத்தை நம்ப வைப்பதே வழி,” என கூறினார்.
டெக்ஸாஸ் அதிகாரிகள், தடுப்பூசி விநியோகம் போதுமான அளவு உள்ளதாக தெரிவித்தனர். “சிலர் தடுப்பூசி குறித்து மனம் மாறுகின்றனர். ஆனால், இன்னும் பலர் மாற வேண்டும்,” என வெல்ஸ் குறிப்பிட்டார்.
கடந்த மாதம், டெக்ஸாஸில் தடுப்பூசி பெறாத, உடல்நல குறைபாடு இல்லாத பாடசாலை வயது குழந்தை ஒருவர் முதல் உயிரிழப்பாக பதிவானார். நியூ மெக்ஸிகோவில், தடுப்பூசி பெறாத ஒருவர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு கால் பகுதி முடிவதற்குள், அமெரிக்காவில் 404 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது 2024 ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 285 பாதிப்புகளை விட அதிகம். 2019 க்கு பிறகு இதுவே அதிகபட்ச பாதிப்பு ஆகும்.