கல்வி அமைச்சு (MOE) மற்றும் பரீட்சைத் திணைக்களத்தின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் பரவும் ஒரு பொய்யான அறிவிப்பு குறித்து கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2024 (2025) க.பொ.த சாதாரண தர (O/L) அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள், பாடத்திட்டத்திற்கு அப்பால் சென்று, வினா முறையில் மாற்றத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவியல் பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 8 கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும் எனவும், தரப்படுத்தல் எல்லை 10 புள்ளிகளால் குறைக்கப்பட்டு, 65 புள்ளிகளுக்கு மேல் பெறுவோருக்கு சிறப்பு தரம் (A) வழங்கப்படும் எனவும் அந்த பொய் அறிவிப்பு கூறுகிறது.
இத்தகவல் முற்றிலும் தவறானது எனவும், இது சமூக ஊடகங்களில் மட்டுமே பரவியுள்ளது எனவும் கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. இது போன்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சு உறுதிப்படுத்தியது.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவை, சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் மூலம் மட்டுமே உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிடுவதாக அமைச்சு தெரிவித்தது.
ஒவ்வொரு அறிவிப்பும் உரிய மதிப்பீட்டிற்குப் பின், கல்வி அமைச்சு அல்லது பரீட்சைத் திணைக்களத்தின் தலைப்பு கடிதத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கையொப்பத்துடன் வெளியிடப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
ஆகவே, இது போன்ற பொய் செய்திகளால் ஏமாற வேண்டாம் என பொதுமக்களை கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.