Homeஐரோப்பாஇங்கிலாந்துஇலங்கை மீதான UK தடைகள்: வெளியுறவு அமைச்சு எதிர்ப்பு

இலங்கை மீதான UK தடைகள்: வெளியுறவு அமைச்சு எதிர்ப்பு

இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, ஐக்கிய இராச்சிய (UK) அரசாங்கம் மூன்று முன்னாள் இராணுவ தளபதிகள் மற்றும் ஒரு முன்னாள் அமைச்சர் மீது தடைகள் விதித்தமைக்கு பதிலளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மார்ச் 24, 2025 அன்று ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) வெளியிட்ட “இலங்கை உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்காக UK தடைகள்” என்ற தலைப்பிலான அறிக்கையை இலங்கை கவனத்தில் கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

அந்த அறிக்கையின்படி, ஐக்கிய இராச்சிய அரசாங்கம் நான்கு நபர்களுக்கு எதிராக தடைகள் விதித்துள்ளது. இவர்களில் மூவர் இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதிகளாவர்.

UK அறிக்கையில், “தேர்தல் பிரச்சாரத்தின்போது பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு தண்டனையின்மையை அனுமதிக்க மாட்டோம் என உறுதியளிக்கப்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளதையும் இலங்கை வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில், “இது ஐக்கிய இராச்சியத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாகும். இதில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என அமைச்சு தெரிவித்தது.

“இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவாது; மாறாக சிக்கலாக்குகின்றன” என அமைச்சு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

மேலும், அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்நாட்டு பொறிமுறைகளை வலுப்படுத்தி வருவதாகவும், கடந்த கால மனித உரிமை மீறல்கள் உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மூலமே கையாளப்பட வேண்டும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath), இன்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick) உடனான சந்திப்பில் தெரிவித்ததாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular