‘பிவிதுரு ஹெல உறுமய’ கட்சியின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila), இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க தூதர் ஜூலி சங் (Julie Chung) சில சொற்களை நீக்கி திருத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய இராச்சிய (UK) அரசு முன்னாள் இராணுவ தளபதிகள் மீது விதித்த தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
“வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தேசபக்தி உணர்வுடன் இந்த அறிக்கையை எழுதியிருப்பார் என நினைக்கிறோம். ஆனால், அரசாங்கத்தின் மீது அதிகாரம் செலுத்தும் அமெரிக்க தூதர் ஜூலி சங், அதில் சில சொற்களை நீக்கி திருத்தியிருக்க வேண்டும்” என கம்மன்பில கூறினார்.
மேலும், “ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்றபோது அவருக்கு வாழ்த்து தெரிவித்த கனேடிய தமிழ் காங்கிரஸ் (Canadian Tamil Congress), தாம் தமது கடமைகளை நிறைவேற்றிவிட்டதாகவும், இனி ஜனாதிபதி தனது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் கடிதம் அனுப்பியுள்ளது” என கம்மன்பில சுட்டிக்காட்டினார். “கனேடிய தமிழ் காங்கிரசுக்கு அரசாங்கம் என்ன பொறுப்புகளை உறுதியளித்துள்ளது என்பது இதுவரை நாட்டுக்கு வெளியிடப்படவில்லை” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
“பிரித்தானியாவின் இராணுவ வீரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் மெத்தனமாக பதிலளிப்பதை பார்க்கும்போது, கனேடிய தமிழ் காங்கிரசுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே இவ்வாறு செயல்படுகிறது என நாம் கருத வேண்டியுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அரசாங்கம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இலங்கையின் இறையாண்மை குறித்து மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கம்மன்பில வலியுறுத்தினார்.