கனடாவின் உச்ச நீதிமன்றம், ஒன்ராறியோ மாகாணத்தில் அமுலில் உள்ள சட்டம் 104, அதாவது தமிழர் இனப்படுகொலை கல்வி வார சட்டத்திற்கு எதிராக இலங்கை சிங்கள அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை நிராகரித்து, தமிழர் இனப்படுகொலையை கல்வி மற்றும் நினைவுகூரல் முயற்சிகளை தொடர அனுமதிக்கும் சட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சட்டம் 2021 ஆம் ஆண்டு ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரம் தமிழர் இனப்படுகொலை கல்வி வாரமாக ஒன்ராறியோவில் அனுஷ்டிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் வகையில் இது அமைந்துள்ளது.
சிங்கள அமைப்புகள் இச்சட்டத்தை ரத்து செய்ய முயன்று, ஒன்ராறியோ நீதிமன்றங்களில் தோல்வியடைந்த பின்னர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன. இம்முயற்சிகளை தமிழ் கனேடிய அமைப்புகள் மற்றும் சட்ட வல்லுநர்கள், தமிழர்களின் துன்பங்களை மறைக்கும் மறுப்பு பிரச்சாரமாக விமர்சித்திருந்தனர்.
“தமிழ் மக்களுக்கு பெரும் வெற்றி”
இச்சட்டத்தை 2019 இல் அறிமுகப்படுத்திய ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். “தமிழர் இனப்படுகொலையை மறுக்கும் தரப்பினரின் மேல்முறையீட்டை கனடா உச்ச நீதிமன்றம் நிராகரித்ததை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இது கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு பெரும் வெற்றியாகும்,” என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
“முதலமைச்சர் டக் போர்டு, சக நாடாளுமன்ற உறுப்பினர்கள், 60ற்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் இளைஞர்களின் அயராத முயற்சிகளுக்கு நன்றி. இது எதிர்கால சந்ததியினருக்கு கல்வி மற்றும் குணமடையும் பாதையை திறக்கும் மைல்கல்லாகும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய கனேடிய தமிழர் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ருக்ஷா சிவானந்தன் கூறுகையில், “ஒன்ராறியோ அரசாங்க வழக்கறிஞர்கள், எமது சட்ட குழு, 60ற்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் கனேடிய சமூகத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். முதலமைச்சர் டக் போர்டு மற்றும் இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் ஆகியோரின் ஆதரவு இதற்கு முக்கியமானது,” என தெரிவித்தார்.
தமிழர் இனப்படுகொலைக்கு அங்கீகாரம்
இந்த தீர்ப்பு, சட்டம் 104ற்கு எதிரான கனடாவிலுள்ள இறுதி சட்ட சவாலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை தமிழர்கள் உலகளவில் வலியுறுத்தி வரும் நிலையில் இது முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. 2022 இல், கனடா நாடாளுமன்றம் மே 18ஐ தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.