Homeஇலங்கையாழ். மாவட்ட செயலகத்தில் குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகம்

யாழ். மாவட்ட செயலகத்தில் குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகம்

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில், இம்மாதம் (ஏப்ரல்) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக, அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நாலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தற்போது, வடமாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் மட்டுமே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் இயங்கி வருகிறது. இதனால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைகளை பெறுவதற்காக வவுனியாவிற்கு பயணிக்க வேண்டியுள்ளது. இது கணிசமான நேரத்தை செலவிட வைப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வடமாகாணத்தில் பெருமளவு மக்கள் கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிப்பதை கருத்தில் கொண்டு, கடந்த ஜனவரி 31, 2025 அன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் பிராந்திய அலுவலகம் ஒன்றை அமைப்பது பொருத்தமானது என முன்மொழியப்பட்டிருந்தது. இது மக்களுக்கு விரைவான சேவையை வழங்க உதவும் எனவும் குறிப்பிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் முன்வைத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் இம்மாதமே புதிய பிராந்திய அலுவலகம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

RELATED ARTICLES

Most Popular