யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள 2.5 கிலோமீட்டர் நீளமான வீதி பகுதி மிக விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர்க்காலத்தில் வலி வடக்கு பகுதியில் பெருமளவு நிலப்பரப்பு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது. போர் முடிவடைந்த பின்னர், அந்நிலங்களின் பெரும்பகுதி மக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்ட போதிலும், பலாலி வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியின் சில பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கியிருந்தன. இதில், காங்கேசன்துறை வீதி முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு விடுவிக்கப்பட்ட நிலையில், பலாலி வீதியின் 2.5 கிலோமீட்டர் பகுதி இதுவரை திறக்கப்படாமல் இருந்தது.
இதனால், அச்சுவேலி மற்றும் தெல்லிப்பளை பகுதிகளுக்கு செல்வதற்கு மக்கள் இணைப்பு வீதிகளையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், குறித்த வீதியை விடுவிப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதுடன், மிக விரைவில் இது மக்கள் பாவனைக்கு திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மாதம் (ஏப்ரல்) நடுப்பகுதியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், மக்களின் நீண்டகால கோரிக்கையான இந்த வீதி திறப்பு நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையுடனான கலந்துரையாடல்கள் முடிவடைந்துள்ளதாக அரச தரப்பு அரசியல்வாதிகள் சிலர் தெரிவித்துள்ளனர். ஏனைய பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், இம்மாதமே இந்த வீதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.