ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிதாக விதித்த பரஸ்பர வரிகளின் பொருளாதார தாக்கத்தை ஆராய்ந்து, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக உயர்மட்ட குழு ஒன்றை நியமித்துள்ளார்.
இக்குழுவில் முக்கிய பொருளாதார கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் உள்ளடங்குவர். நிதி அமைச்சின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், முதலீட்டு சபையின் (BOI) தலைவர், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தலைவர், மற்றும் வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகார பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இதில் அங்கம் வகிப்பர்.
மேலும், ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் டுமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதான பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, மற்றும் வியாபார தலைவர்களான அஷ்ரொப் ஓமர், ஷரத் அமலீன், சைஃப் ஜாஃபர்ஜி ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்க வரி மாற்றங்களால் ஏற்படும் சவால்களை மதிப்பீடு செய்து, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை குறைப்பதற்கான உத்திகளை முன்மொழிவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இக்குழு, எதிர்வரும் வாரங்களில் தமது கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளது.