முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், அக்கரைவெளி, மாரியாமுனை வீதியை புனரமைப்பது தொடர்பில், மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் துறைசார் அதிகாரிகளுடன் நேற்று (மார்ச் 29) காலை 8.30 மணிக்கு நேரடி கள விஜயம் நடைபெற்றது.
கடந்த வாரம் வடமாகாண ஆளுநர் கௌரவ நா. வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் ஏற்பாட்டில் இந்த கள விஜயம் முன்னெடுக்கப்பட்டது.
கள விஜயத்தின்போது, அக்கரைவெளி மாரியாமுனை செல்லும் 16 கிலோமீட்டர் வீதி முழுமையாக பழுதடைந்த நிலையிலும், சில பகுதிகளில் வீதியே இல்லாத நிலையிலும் இருப்பது கண்டறியப்பட்டது. இப்பகுதியில் உள்ள உலத்துவெளி, எரிந்தகாடு, நாயடச்சமுறிப்பு, பெரியவெளி, அக்கரைவெளி, மாரியாமுனை ஆகிய இடங்களில் 1800 ஏக்கர் வயல் நிலங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதில், 600 விவசாயிகள் தமது அறுவடை நெல்லை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இதனால், இவ்வீதியை புனரமைக்குமாறு பிரதேச விவசாயிகள் மாவட்ட செயலாளரிடமும், வடமாகாண ஆளுநரிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர். இக்கோரிக்கையை ஏற்று, மாவட்ட செயலகம் பல்வேறு திட்டங்கள் மூலம் வீதியை புனரமைக்க முன்மொழிந்தது.
கடந்த வாரம் நடைபெற்ற கலந்துரையாடலில், வடமாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர், துறைசார் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்புடன், வீதி புனரமைப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டு அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், முக்கியத்துவத்தின் அடிப்படையில் இவ்வீதி கட்டம் கட்டமாக புனரமைக்கப்படும் என ஆளுநர் உறுதியளித்திருந்தார்.
இதற்கான மீள் ஆய்வாக நேற்றைய கள விஜயம் இடம்பெற்றது. இதில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், கரைதுறைப்பற்று உதவி பிரதேச செயலாளர், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.