இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோரும் அவர்களது பிரதிநிதிகள் குழுவினரும் பங்கேற்ற உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகள், சற்று முன்னர் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றன.
இன்று காலை, சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு இலங்கை அரசு வரலாற்று சிறப்புமிக்க உத்தியோகபூர்வ வரவேற்பு அளித்தது. இது, முதல் முறையாக ஒரு வெளிநாட்டு தலைவருக்கு இவ்வாறு கௌரவம் வழங்கப்பட்ட சம்பவமாகும். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்தில் திஸாநாயக்கவுடன் மோடி “கட்டுப்படுத்தப்பட்ட” பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்த சந்திப்பு, மோடியின் மூன்று நாள் இலங்கை விஜயத்தின் முக்கிய தருணமாக அமைந்துள்ளது. “பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான கூட்டாண்மைகளை வளர்ப்பது” என்ற பகிரப்பட்ட பார்வையின் கீழ் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதே இவ்விஜயத்தின் நோக்கமாகும்.
நேற்று (ஏப்ரல் 4) பாங்கொக்கில் நடைபெற்ற BIMSTEC உச்சிமாநாட்டிற்கு பின்னர் இலங்கை வந்த மோடி, 2019க்கு பிறகு மீண்டும் இலங்கையை விஜயம் செய்கிறார். இவ்விஜயத்தில், இந்தியாவும் இலங்கையும் ஒரு முக்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன.
மேலும், பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாக உள்ளன. குறிப்பாக, இலங்கையின் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மலிவு விலை எரிசக்தியை வழங்குவதற்கான ஒரு ஒப்பந்தமும் இதில் அடங்கும்.
பாதுகாப்பு ஒப்பந்தத்துடன், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு, இருதரப்பு இணைப்பை மேம்படுத்துதல், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இவ்விஜயம் இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவுகளை கணிசமாக வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை, மோடி மற்றும் திஸாநாயக்க ஆகியோர் அநுராதபுரத்திற்கு பயணம் மேற்கொண்டு, இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைப்பர். அங்கு, இந்திய-இலங்கை நாகரிக பிணைப்பில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஜய ஸ்ரீ மகா போதி கோவில் வளாகத்தை வணங்கவுள்ளனர். மோடி இக்கோவிலை 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு விஜயங்களின்போதும் வணங்கியிருந்தார்.
இவ்விஜயத்தின் போது, மோடி இலங்கையின் ஏனைய அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.