நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் திகதி, பல் பிரச்சினை மற்றும் தோல் நோய்க்காக சிகிச்சை பெறுவதற்காக இளம் பெண் ஒருவர் தனது தாயுடன் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். பரிசோதனையின் போது, மருத்துவர் ஒருவர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் மருத்துவமனை பணிப்பாளர் மூலம் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு புகாரளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 2) நீதிமன்ற மருத்துவ அதிகாரியால் பரிசோதிக்கப்பட்டார். ஆயினும், பரிசோதனைக்கு பின்னர் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் திருப்தியடையாததாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் அறிக்கை கூறுகிறது.
இதையடுத்து, பெண்ணை சிறப்பு மருத்துவ குழு மூலம் மீண்டும் பரிசோதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கிடையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. சம்பவத்தின் தீவிரத்தன்மையை ஒப்புக்கொண்ட சங்கம், குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் 2021 ஆம் ஆண்டு சங்கத்திலிருந்து நீக்கப்பட்டவர் என தெரிவித்துள்ளது. அவர் தொடர்ச்சியான ஒழுக்க மீறல்களால் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக GMOA கூறியுள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கடுமையாக தண்டிக்க வேண்டும் என GMOA வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இலவச சுகாதார முறைமை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் எனவும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.