நான்கு வாரங்களாகத் தொடரும் அமெரிக்க - ஈரான் இடையிலான உக்கிரமான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் வகிக்கத் தான் தயாராக இருப்பதாகப் பாகிஸ்தான் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பாரிய மனிதாபிமான மற்றும் பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு, தகுந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் "அர்த்தமுள்ள மற்றும் தீர்க்கமான" (Meaningful and Conclusive) பேச்சுவார்த்தைகளைத் தனது மண்ணில் நடத்தத் தயார் எனப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இந்தத் திடீர் அறிவிப்புக்கு முன்னதாக, பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் தொலைபேசி ஊடாக நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளார். ஈரானுடன் நீண்ட எல்லைப் பகிர்வைக் கொண்டுள்ள பாகிஸ்தான், அந்நாட்டின் அரசியல் மற்றும் இராணுவ நகர்வுகளை நன்கு அறிந்த நாடு என்ற அடிப்படையில், இந்த மத்தியஸ்தப் பணியைத் ட்ரம்ப் நிர்வாகம் பெரிதும் வரவேற்பதாகத் தெரியவருகிறது.
சர்வதேச ஊடகத் தகவல்களின்படி, இந்த வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் ஒரு உயர்மட்டச் சந்திப்பை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் சார்பில் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் (JD Vance) தலைமையிலான உயர்மட்டக் குழுவும், ஈரானின் சார்பில் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Baqer Qalibaf) தலைமையிலான குழுவும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் இந்த அமைதி முயற்சிக்குப் பின்னால் இருந்து ஆதரவு வழங்கி வருகின்றன. எவ்வாறாயினும், ஈரான் தரப்பில் இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து இன்னும் உத்தியோகபூர்வமான சம்மதம் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் பாகிஸ்தான் சமாதானத் தூதுவராகத் தன்னை முன்னிறுத்தினாலும், மறுபுறம் ஈரான் இன்று அதிகாலை இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் இந்தப் பேச்சுவார்த்தை முயற்சியைச் சிதைக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. "அமெரிக்காவின் பேச்சுவார்த்தை அழைப்பு ஒரு ஏமாற்று வேலை" என ஈரானியத் தலைமை கருதுவதால், பாகிஸ்தானின் இந்த முயற்சி வெற்றியடையுமா என்பது வரும் 48 மணிநேரங்களிலேயே தெரியவரும்.







