அமெரிக்கக் கடற்படையினரால் காலி கடற்பரப்பிற்கு அப்பால் வைத்துத் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலான 'IRIS Dena' தொடர்பில், இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிசெரா டெல்கோஷ் இன்று முக்கிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அமெரிக்காவின் தாக்குதலுக்குள்ளான அந்தக் கப்பல் போர் நடவடிக்கைகளுக்காக அன்றி, ஒரு நல்லெண்ண விஜயத்திற்காகவே இலங்கைக்கு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை கடற்படையின் அழைப்பு
"IRIS Dena கப்பலானது இலங்கை கடற்படையினரின் நேரடி அழைப்பின் பேரில் (Invited by Sri Lanka Navy) இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்தது. இந்தியாவில் நடைபெற்ற கூட்டு கடற்படைப் பயிற்சியின் போது, இலங்கை கடற்படைத் தளபதியினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்றுக்கொண்டே எமது கப்பல்கள் இங்கு வந்தன" எனத் தூதுவர் இதன்போது உறுதிப்படத் தெரிவித்தார்.
அமெரிக்காவினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், இந்தக் கப்பல்கள் எவ்விதமான போர் நோக்கங்களையும் கொண்டிருக்கவில்லை எனவும், இந்தியப் பெருங்கடலில் அமைதிப் பணிகளிலேயே ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
இசைக்கலைஞர்களே கொல்லப்பட்டனர்
இந்தத் தாக்குதலின் போது கொல்லப்பட்ட சுமார் 104 பேரில் பெரும்பாலானோர் இராணுவப் பயிற்சி பெற்ற வீரர்கள் அல்ல எனவும், அவர்கள் ஒரு இசைக்குழுவைச் (Music Band) சேர்ந்தவர்கள் எனவும் தூதுவர் கவலை வெளியிட்டுள்ளார். "அவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருக்கவில்லை, மாறாக சாக்ஸபோன் (Saxophone) மற்றும் வயலின் போன்ற இசைக்கருவிகளே இருந்தன. தற்காப்புத் திறனற்ற ஒரு கப்பலை, எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி அமெரிக்கா தாக்கியுள்ளமை மனிதாபிமானமற்ற செயலாகும்" என அவர் சாடியுள்ளார்.
மாலுமிகளைத் தாய்நாடு அனுப்பக் கோரிக்கை
தற்போது இலங்கையின் வத்தளை - வெலிசற கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள எஞ்சிய 251 ஈரானிய மாலுமிகளையும் (IRIS Dena மற்றும் IRIS Bushehr கப்பல்களைச் சேர்ந்தவர்கள்) உடனடியாகத் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
"அவர்கள் தற்போது இலங்கையில் பாதுகாப்பாக உள்ளனர், இலங்கை அரசு அவர்களுக்குச் சிறந்த வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. இருப்பினும், அவர்கள் தமது குடும்பங்களைப் பிரிந்து கவலையில் உள்ளனர். அவர்களை விரைவில் ஈரானுக்கு அழைத்துச் செல்வதே எமது தற்போதைய நோக்கம்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடுநிலையான போக்கைக் கடைப்பிடித்து வருவதாகவும், அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியாது ஈரானிய மாலுமிகளுக்குப் புகலிடம் வழங்கியமைக்குத் தனது நன்றிகளையும் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.






