இந்தோனேசியாவின் டெர்னேட் (Ternate) நகருக்கு அப்பாலுள்ள வடக்கு மொலுக்கா கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை நிலவிய ரிக்டர் அளவில் 7.4 மெக்னிடியூட் கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) அறிவித்துள்ளது.
அண்டை நாடுகள் சிலவற்றிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இலங்கைக்கு அத்தகைய ஆபத்து எதுவும் இல்லை என அந்த நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இந்தோனேசியாவின் வடக்கு சுலாவேசி மாகாணத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், கடலோரப் பகுதிகளில் சுமார் 2.5 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பியதை அடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் மீளப் பெறப்பட்டது.
சுலாவேசி மற்றும் மாலுகு தீவுக்கூட்டங்களுக்கு இடையே உள்ள மொலுக்கா கடற்பரப்பில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வடக்கு மினாசா பகுதியில் 75 சென்ரிமீற்றர் உயரத்திற்கும், பிதுங் பகுதியில் 20 சென்ரிமீற்றர் உயரத்திற்கும் அலைகள் பதிவாகியுள்ளதாக இந்தோனேசியாவின் புவியியல் நிறுவனம் (BMKG) சுட்டிக்காட்டியுள்ளது.
ஆரம்பத்தில் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் கடற்கரையோரங்களுக்கு பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) அபாய எச்சரிக்கையை விடுத்திருந்தது. எனினும், நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் சுனாமி அச்சுறுத்தல் நீங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு அந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.









