மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில், ஒருநாள், இருபதுக்கு 20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இந்தத் தொடரானது இரு அணிகளுக்கும் இடையிலான சர்வதேச தரவரிசை மற்றும் எதிர்காலத் தொடர்களுக்கான முன்னேற்பாடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் மாதம் 3, 6 மற்றும் 8 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 11, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் இடம்பெறவுள்ளது. இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ஆறு போட்டிகளும் ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் (Sabina Park) மைதானத்தில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளைப்பந்து தொடர்களைத் தொடர்ந்து, ஜூன் 18 முதல் 21 ஆம் திகதி வரை கூலிட்ஜ் (Coolidge) மைதானத்தில் பயிற்சிப் போட்டியொன்று இடம்பெறவுள்ளது. இதன் பின்னர், இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 25 முதல் 29 வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 3 முதல் 7 வரையும் அன்டிகுவாவில் உள்ள சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் (Sir Vivian Richards Stadium) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.








