அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடான குவைத்தின் மிக முக்கியமான மின் உற்பத்தி மற்றும் கடல்நீர் உப்புநீக்கல் (Desalination Plant) நிலையம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இக்கோரத் தாக்குதலில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இந்தியத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், நிலையத்தின் சேவைக் கட்டடம் ஒன்றும் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகக் குவைத்தின் மின்சாரம் மற்றும் நீர் அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா ஜவ்ஹர் ஹயாத் உறுதிப்படுத்தியுள்ளார். குவைத்தின் குடிநீர்த் தேவையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை இவ்வாறான சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுவதால், இது அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றது.
கடந்த வாரம் குவைத்தின் மினா அல் அஹ்மதி (Mina Al-Ahmadi) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்கு வைத்து ஈரானிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், தற்போது குடிநீர் விநியோகத்தைக் குறிவைத்துத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரானின் எறிகணைத் தாக்குதலில் குவைத்திய ஆயுதப்படையினரைச் சேர்ந்த 10 பேர் காயமடைந்ததுடன், குவைத்திய வான்பரப்பில் 14 ஏவுகணைகளும் 12 ட்ரோன்களும் பாதுகாப்புப் படையினரால் இனங்காணப்பட்டுள்ளன.
தனது நாட்டின் எரிபொருள் மற்றும் சக்தி நிலையங்கள் தாக்கப்பட்டால், ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தின் உட்கட்டமைப்புகளையும் தாக்குவோம் என ஈரான் ஏற்கனவே விடுத்திருந்த எச்சரிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல்கள் பார்க்கப்படுகின்றன.
இந்தப் போரின் காரணமாக இதுவரை உயிரிழந்த இந்திய நாட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது 8 ஆக உயர்ந்துள்ளமை, வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் சக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை ஏப்ரல் 6 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள போதிலும், ஈரான் தனது தாக்குதல்களைத் தணிப்பதாகத் தெரியவில்லை. தற்போது குவைத்தில் அவசரகாலத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு நீர் மற்றும் மின் விநியோகம் ஓரளவு சீராகப் பேணப்பட்டு வந்தாலும், தொடர்ச்சியான இவ்வாறான தாக்குதல்கள் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைப் பெருமளவு பாதித்துள்ளன.









