உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மொஸ்கோவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் ஜோன்ஸ் ஜெரார்டஸை (Jones Gerardus) நாட்டை விட்டு வெளியேற்ற ரஷ்யா தீர்மானித்துள்ளது. இந்த அதிரடித் தீர்மானத்தை ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜோன்ஸ் ஜெரார்டஸின் இராஜதந்திர அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் FSB விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலான உளவு வேலைகள் மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, உத்தியோகபூர்வமற்ற சந்திப்புகளின் போது ரஷ்யப் பொருளாதாரம் தொடர்பான மிக முக்கியமான மற்றும் இரகசியத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு அவர் முயற்சித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உக்ரேனிய போர் மற்றும் சர்வதேசத் தடைகள் காரணமாக ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை அதிகரித்துள்ள சூழலில், இந்த வெளியேற்ற நடவடிக்கை சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









