அவுஸ்திரேலியாவில் நிலவும் கடும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளால் ஏற்பட்டுள்ள சவால்களைச் சமாளிக்கும் பொருட்டு, எரிபொருள் மீதான உற்பத்தி வரியை (Fuel Excise) பாதியாகக் குறைக்க அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் அந்தோனி அல்பானிஸ் (Anthony Albanese) தலைமையில் இன்று (30) நடைபெற்ற மத்திய மற்றும் மாநிலத் தலைவர்களின் அவசரக் கூட்டத்தில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாகனச் சாரதிகள் ஒரு லீட்டர் எரிபொருளுக்குச் சுமார் 26 காசுகள் (26 cents) வரை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இந்தச் சலுகை அடுத்த மூன்று மாதங்களுக்குத் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதே இந்த அதிரடி வரிக்குறைப்பின் பிரதான நோக்கமாகும். வரிக்குறைப்புடன் மேலதிகமாக, விநியோகச் சங்கிலியை (Supply Chain) எவ்விதத் தடையுமின்றிப் பேணும் நோக்கில் கனரக வாகனங்களுக்கான வீதிப் பயன்பாட்டுக் கட்டணங்களும் அடுத்த மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்திற்கொண்டு, இந்தத் தற்காலிக நடவடிக்கைகள் மூன்று மாதங்களின் பின்னர் மீளாய்வு செய்யப்படும் எனப் பிரதமர் அல்பானிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, எரிபொருள் தேவையைச் சமநிலைப்படுத்துவதற்காகப் பொதுமக்கள் இயலுமானவரை பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துமாறு அரசாங்கம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச ரீதியாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் ஒரு இக்கட்டான காலப்பகுதியில், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த மனிதாபிமான அடிப்படையிலான பொருளாதார நகர்வு அந்நாட்டு மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. எனினும், போர்ச் சூழல் நீடிக்கும் பட்சத்தில் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான மேலதிக மாற்றுத் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.









