இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் விசேட உதவியின் கீழ் 38,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய கப்பல் நாளை (28) கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிறுவனங்கள் எரிபொருளை விநியோகிப்பதில் பாரிய சிக்கல்களை (Force Majeure) எதிர்கொண்டன. இதனால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது. இதனைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் இந்தியத் தூதரகம் ஊடாக விடுத்த அவசர வேண்டுகோளுக்கிணங்க இந்த விநியோகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள்
கடந்த செவ்வாய்க்கிழமை (24), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அதற்கு முன்னதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் இது தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தனர்.
அவசரகால விநியோகம்
நாளை வரவுள்ள இந்த எரிபொருள் கப்பலில்:
• 20,000 மெட்ரிக் தொன் டீசல்
• 18,000 மெட்ரிக் தொன் பெற்றோல்
அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லங்கா ஐ.ஓ.சி (LIOC) மற்றும் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (IOCL) ஆகிய நிறுவனங்கள் ஊடாக இந்த அவசரகால உதவி இலங்கைக்கு வழங்கப்படுகின்றது. இதன் மூலம் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு ஓரளவுக்குக் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைக்கு மத்தியில், இந்தியா வழங்கியுள்ள இந்த ஒத்துழைப்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.









