இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தினால் தமிழ் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான மிக முக்கியமான விசாரணை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தன்னைப்பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் தவறான மற்றும் அவதூறான தகவல்கள் குறித்த ஊடகங்களினால் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகக் கூறி, சர்ச்சைக்குரிய 'நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின்' கீழ் சாணக்கியன் இந்த சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த வழக்கில் IBC தமிழ், லங்காசிறி மற்றும் தமிழ்வின் ஆகிய நிறுவனங்களுடன் பாஸ்கரன் கண்டையா, நிராஜ் டேவிட் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் பலரும் எதிர்மனுதாரர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
எதிர்மனுதாரர்களின் ஆட்சேபனை
கடந்த மார்ச் 17 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சாணக்கியன் தரப்பினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்த நீதவான் நீதிமன்றம், எதிர்மனுதாரர்களுக்குத் தமது ஆட்சேபனைகளை (Objections) முன்வைக்கக் கால அவகாசம் வழங்கியிருந்தது. அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) குறித்த ஊடக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள், இந்த மனுவிற்கு எதிரான தமது கடும் ஆட்சேபனைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளனர்.
சர்ச்சைக்குரிய நிகழ்நிலைக் காப்புச் சட்டம்
இந்த வழக்கு தற்போது அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 'நிகழ்நிலைக் காப்புச் சட்டம்' நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, அது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் கருவியாக அமையும் எனக் கூறி சாணக்கியன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், தற்போது அதே சட்டத்தைப் பயன்படுத்தி அவர் தமிழ் ஊடகங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளமை "இரட்டை வேடம்" என ஊடக அமைப்புகளினால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
எவ்வாறாயினும், இது ஒரு திட்டமிட்ட அவதூறு பரப்புரை என்றும், நீதிமன்றத்தின் ஊடாகத் தனது கௌரவத்தைப் பாதுகாப்பதே தனது நோக்கம் என்றும் சாணக்கியன் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார்.
ஊடக சுதந்திரம் மீதான அச்சுறுத்தல்?
இந்த வழக்கின் தீர்ப்பு, இலங்கையில் குறிப்பாகத் தமிழ் ஊடகங்களின் சுதந்திரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு எதிரான விமர்சனங்களை 'அவதூறு' எனக் கூறி முடக்குவதற்கு இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுமானால், அது ஊடகத்துறையை மௌனமாக்கும் முயற்சியாக அமையும் எனச் சிவில் சமூக அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள விசாரணையில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு, இந்தச் சட்டத்தின் எதிர்காலப் பயன்பாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.







