மத்திய கிழக்கில் அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் நேரடி யுத்தம், தற்போது அணுசக்தி மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புக்களை நிர்மூலமாக்கும் ஒரு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. யுத்தத்தின் 28-வது நாளான நேற்று (27) இரவு இஸ்ரேலிய விமானப்படை முன்னெடுத்த பாரிய வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் பல முக்கிய நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டன.
குறிப்பாக, யஸ்டு (Yazd) மாகாணத்தில் உள்ள அர்தகான் யுரேனியம் பதப்படுத்தும் நிலையம் மற்றும் கொண்டாப் (Khondab) கனநீர் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. இத்தாக்குதல்களை இஸ்ரேலிய பாதுகாப்புத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அணு உலைகளில் கதிர்வீச்சு கசிவுகள் எவையும் ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் அந்நாட்டின் பிரம்மாண்ட எஃகு (Steel) ஆலைகளும் இந்த வான்வழித் தாக்குதலில் சிதைக்கப்பட்டுள்ளன. இஸ்ஃபஹானில் உள்ள மொபாரக்கே மற்றும் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள முக்கிய எஃகு உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மின் விநியோகக் கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஈரானின் ஒரே ஒரு செயற்படும் அணுமின் நிலையமான புஷெர் (Bushehr) நிலையத்தின் சுற்றுப்பகுதியில் ஏவுகணையொன்று வீழ்ந்து வெடித்துள்ளது. எனினும், அணு உலைக்கு நேரடித் தொழில்நுட்பச் சேதங்களோ அல்லது உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் (IAEA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்துள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi), இஸ்ரேலின் இந்த அத்துமீறல்களுக்கு ஈரான் "மிகக் கடுமையான விலையைத்" (Heavy Price) தண்டனையாக வழங்கும் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்புடனேயே இஸ்ரேல் இவ்வாறான போர்க்குற்றங்களை இழைத்து வருவதாக அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானியப் புரட்சிகரக் காவல்படை (IRGC) பதில் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகவும், இதனால் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் உச்சமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









