முல்லைத்தீவு - மந்துவில் பகுதியில் கடந்த 2025 ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களை, புதுக்குடியிருப்பு பொலிஸார் நீண்ட தேடுதல் வேட்டையின் பின்னர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதுடன், இவர்கள் அனைவரும் நெருங்கிய உறவினர்கள் என்பது விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மந்துவில் பகுதியிலுள்ள வீடொன்றில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். இது தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜனக குணசேகரவின் நேரடி மேற்பார்வையில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
திருடப்பட்ட போன் மூலம் சிக்கிய கும்பல்
கொள்ளையிடப்பட்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றை அடிப்படையாக வைத்து, முல்லைத்தீவு நீதவானின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட தொழில்நுட்ப விசாரணைகளின் போதே இக்கும்பல் சிக்கியுள்ளது. முதலில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, ஏனைய நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி வாங்கிய சொகுசு மோட்டார் சைக்கிள்கள், இயந்திரங்கள் மற்றும் பெறுமதியான வீட்டு உபயோகப் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அம்பலம்
கைது செய்யப்பட்ட இந்த உறவினர் கும்பல், கடந்த 2023 ஆம் ஆண்டு முதலே இரணைப்பாலை, மந்துவில், சிவநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாகக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாகத் தனிமையில் இருக்கும் வீடுகளைக் குறிவைத்தே இவர்கள் நீண்டகாலமாகத் திட்டமிட்டுத் திருடி வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் கடந்த 24 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இக்கும்பலுடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்தும் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









