இலங்கை மற்றும் ரஷ்யா இடையிலான எரிசக்தி துறைசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின், இன்று (26) மாலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, உலகளாவிய சந்தையில் நிலவும் எரிசக்தி நெருக்கடி மற்றும் இலங்கையின் தற்போதைய எரிபொருள் தேவை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து நீண்டகால அடிப்படையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வது மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அரசுகளுக்கிடையிலான (G2G) ஒப்பந்தங்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
முன்னதாக, இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ரஷ்யப் பிரதி அமைச்சரை, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் ஆகியோர் வரவேற்றனர். வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முக்கியத்துவமிக்க விஜயம்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யப் பிரதி அமைச்சரின் இந்த வருகை இலங்கைக்கு மிக முக்கியமானது எனக் கருதப்படுகிறது. ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இச்சந்திப்பைத் தொடர்ந்து, எரிசக்தித் துறையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எட்டப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.










