Start writin-டெருயல் (Teruel): மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச விமான போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் விளைவாக, ஸ்பெயினின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்துள்ள டெருயல் (Teruel) விமான நிலையம், மீண்டும் ஒருமுறை விமானங்களின் "பார்க்கிங் லாட்" (Parking Lot) ஆக மாறியுள்ளது.
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக, கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) தனது முக்கிய விமானங்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 15 க்கும் மேற்பட்ட விமானங்கள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380, மற்றும் அதிநவீன Airbus A350, Boeing 787 Dreamliner ரக விமானங்கள் தற்போது இந்த விமான நிலையத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஸ்பெயினின் இந்தப் பகுதி மிகவும் வறண்ட காலநிலையைக் கொண்டது. இதனால் விமானங்கள் துருப்பிடிக்காமல் நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்கும் என்பதால், விமான நிறுவனங்கள் இந்த இடத்தை தெரிவு செய்துள்ளன.
கடந்த 2020-ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்றின் போது விமானங்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்த அதே நிலையை இப்போதைய போர்ச் சூழல் மீண்டும் ஏற்படுத்தியுள்ளதாக விமான போக்குவரத்து அவதானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு வான்பரப்புகள் அவ்வப்போது மூடப்படுவதால், தோஹா (Doha) போன்ற முக்கிய மையங்கள் வழியாக இயக்கப்படும் விமான சேவைகள் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளன. லண்டன், நைரோபி மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களில் தரித்து நின்ற விமானங்கள் அனைத்தும் தற்போது போர் அபாயம் நீங்கும் வரை டெருயல் விமான நிலையத்தில் "ஆழமான சேமிப்பில்" (Deep Storage) வைக்கப்படவுள்ளன.






